திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர்... அமைச்சர் கே என் நேரு பரபரப்பு பேட்டி.!
thiruvarur therku ratha veethi name issue
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, திமுக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மிக தொன்மை வாய்ந்த புகழ் பெற்ற புண்ணியத் தலம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவில், தெற்கு ரத வீதியின் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காக திருக்கோவிலின் தேர் உலா வரும் தெருக்களில் ஒன்றுக்கு வைக்க வேண்டும் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "டாக்டர் கலைஞர் சாலை என்ற பெயர் சூட்ட விரும்பினால், திருவாரூரில் வேறு தெருக்கள் இல்லையா, தமிழர்களின் கடவுள் பக்தியை, இறை நம்பிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள்.
திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி என்ற பெயரில் மாற்றுவதற்கு தமிழக மக்களின் சார்பிலும் எங்கள் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் திருக்கோவில், தெற்கு ரத வீதியின் பெயரை மாற்றாது மரபு வழி அதே பெயர் தொடர்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அண்ணாமலை தேய்வது இருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேருவிடம், 'திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்தால், அரசை இயங்க விடமாட்டோம்' என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பற்றி உங்களின் கருத்து என்ன?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, "பாஜகவினர் கை, கால்களை கட்டிப் போட்டு விடுவார்களா? என்ன செய்து விடுவார்கள்?
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க சொல்லி இருக்கிறார். தற்போது வரை பழைய பெயரில் தான் இருந்து வருகிறது.
இவர்களுக்கு ஏதாவது ஒரு விவகாரம் கையில் சிக்காத என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு தனி நபரும் ஆளும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியுமா? அரசாங்கப் பணியை, அரசாங்க அலுவலகப் பணியை நிறுத்தி வைத்தால் அதற்கான வழக்குகளை சந்திக்க நேரிடும்" என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.
English Summary
thiruvarur therku ratha veethi name issue