அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாபம் - திமுக கூட்டணி கட்சி தலைவர் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாப நோக்கம் கொண்ட என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "திருப்பதி வெங்கடாசலபதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடத்தக்க வகையில் பேசியிருந்தார். எந்தவித ஐயத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே பதற்றத்தை உருவாக்கும் சந்திரபாபு நாயுடுவின் கருத்து கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை கடுமையாக பாதிக்கக் கூடியது. 

இது அரசியல் ஆதாயத்துக்காக ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில், அப்படி ஒரு குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். லட்டுவில் மட்டுமின்றி எந்தவொரு பொருளிலும் மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதை சாக்காக வைத்து சங் பரிவார் அமைப்புகள் ஆன்மிக போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் சாமியார்களும் உடனடியாக அனைத்து ஆலய நிர்வாகங்களும் இறை நம்பிக்கையுடைய மற்றும் பக்தர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அதுவே இத்தகைய குறைபாடுகள் நிகழாமல் இருப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள். பாஜகவின் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. ஆன்மிகப் போர்வையிலிருந்து ஆசாராம்பாபு, குர்மித்சிங் ராம் ரஹிம், பிரேமானந்தா ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டவர்கள். நித்தியானந்தா பல குற்றங்களுக்காக தலைமறைவாகி இருக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் கூட குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

இன்னொரு பக்கம், பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு சங் பரிவார் அமைப்புகளில் இருப்பவர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், காஞ்சி ஏகாம்பரநாதர், கன்னியாகுமரி கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன், கன்னியாகுமரி வெள்ளிமலை பாலசுப்ரமணியசாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சென்னை முத்துக்குமாரசுவாமி, தஞ்சாவூர் பந்தநல்லூர் பசுபதி ஈஸ்வரர் ஆகிய திருக்கோயில்களுக்கும், கடலூர் பண்ருட்டி நகர் குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கும் சொந்தமான நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.

‘சிவன் சொத்து குல நாசம்’ என்று ஊருக்கு போதித்துக் கொண்டு கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களே.

சிதம்பரம் பொது தீட்சிதர்கள் பக்தர்களின் காணிக்கையை கணக்கில் காட்டவில்லை என்கிற வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, கோயில்களும், கோயில் சொத்துகளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதே பாதுகாப்பான ஏற்பாடாகும்.

இந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தான் ஏற்கெனவே தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களும், ஆலய சொத்துகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன. இதற்கு மாறாக, அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாப நோக்கம் கொண்டதாகும்.

சங் பரிவார் அமைப்புகளின் தீய உள்நோக்கம் கொண்ட இத்தகைய கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியையும் மதச்சாயம் பூசி மதவெறி பிரச்சாரம் செய்வதும், மத வன்முறையை உருவாக்குவதுமே இவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது மதமாற்றத்தினால் என பிரச்சாரம் செய்து கலவரத்தை தூண்ட முயன்றார்கள். பின்னர் சிபிஐ விசாரித்து அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெளிவுப்படுத்திவிட்டது.

எனவே, சங் பரிவார் அமைப்புகளின் இத்தகைய தீய உள்நோக்கம் கொண்ட தொடர் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக மக்கள் இத்தகைய நபர்களையும், இயக்கங்களையும் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்” என்று கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripathy Lattu issue CPIM Condemn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->