பொன்முடி மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை வீடு புகுந்து கைது செய்து பழிவாங்குவதா? டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
TTV Dhinakaran condemn to DMK Govt Iruvelpattu village
அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தங்களை சந்திக்க வராத அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்களை காவல்துறையினர் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் இரவோடு இரவாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட்ட மக்கள் மீதே மீண்டும் அடக்குமுறையை கையாண்டிருப்பது திமுக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அப்பகுதி மீதான பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran condemn to DMK Govt Iruvelpattu village