ஆவணி அவிட்டம்., ஆனால் இந்த வருஷம் ஆடி மாசத்துல வருது ஏன்.!
avani avittam special
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பூணூல் அணிபவர்கள் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும்.
ஆவணி அவிட்டம் என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு அவிட்டம் நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விரதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம் ஆகும்.
ஆவணி அவிட்டம் இந்த ஆண்டு ஆடி மாதம் 30-ம் தேதி (15.08.2019) வியாழக்கிழமை பௌர்ணமி நாளில் வந்துள்ளது. அவிட்டம் நட்சத்திரத்தில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வேளையில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள், தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு, புதிய பூணூலை அணிந்து கொள்வர்.
இந்நாளில் பூணூல் அணிபவர்கள் அனைவரும் ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.
இச்சமயத்தில் தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமூலமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள்.
சிலர் தன் உறவினர் வீட்டு திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் செய்து விடுவார்கள். இதற்கு உபநயனம் என்று பெயர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்ற வருடம் ஆவணி அவிட்டதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
உபநயனம் என்றால் துணைக்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் குறிப்பிடுகிறார். நமக்கு இரண்டு கண்கள் உள்ளன. இது தவிர மூன்றாவது கண்ணான ஞானக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் உபநயனம்.
கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்ற வருடம் ஆவணி அவிட்டதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
மகா விஷ்ணு பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்தபோது அவருக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை நம்மால் உணரமுடியும்.
பூணூல் அணிபவர்கள் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம் கிடைக்கும்.