சித்திரை திருவிழா:- தஞ்சை பெரிய கோவிலில் இன்று கொடியேற்றம்.!
flag hoisting in thanjavur big temple for sithirai chariat
உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திற்கு முன்பு சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. இந்த விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
English Summary
flag hoisting in thanjavur big temple for sithirai chariat