கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது.. திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
kan thirusti pariharam
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக... கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.
கழிக்கும் வகைகள் :
கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு.
சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க வேண்டும். அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
வீடு, வண்டி வாகனம், வியாபாரம் செய்யும் இடங்களில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்துவிடும்.
பூசணிக்காயில் குங்குமத்தையும், சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.