தினம் ஒரு திருத்தலம்... மானசீக தெய்வம்... தத்து கொடுக்கும் குழந்தைகள்..!!
makali amman temple
அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
ஒரே கல்லில் திருவாச்சியுடன் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. பின்னிரு கரங்களில் உடுக்கை, ஜெபமாலை முன்னிரு கரங்களில் சூலம், குங்கும கிண்ணம் ஆகியவற்றை ஏந்தி நின்ற கோலத்தில் மாகாளி காட்சியளிக்கிறாள். சிலையில் ஆபரணங்கள், புடவை மடிப்பு, கால் கொலுசு, வளையல்கள் என தத்ரூபமாக இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 8 தூண்களுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது.
மகா மண்டபத்தில் அழகுடன் அமைக்கப்பட்டுள்ள சூலம் நம்மை வரவேற்பதைப் போல் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு :
உருவத்தில் உக்ர தோற்றத்தை கொண்டிருந்தாலும் அம்மனின் சாந்த குணம், கருணை உள்ளம், அருளாற்றல் ஆகியவற்றால் குழந்தைகள் அம்மனை மானசீக தெய்வமாக போற்றி பூஜித்து வருகின்றனர்.
அர்த்த மண்டப நுழை வாயிலின் இருபுறமும் நீலி, சூலி ஆகிய துவார பாலகிகள் காவல் புரிகின்றனர்.
அர்த்த மண்டபத்தின் வடபுறம் உற்சவர் மற்றும் நடராஜர் பஞ்ச லோக திருமேனிகள் உள்ளன.
திருவிழாக்கள் :
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் விசேஷ பூஜையுடன் அலங்கார ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
வருட திருவிழாக்களில் 15 நாட்கள் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா முக்கிய விழாவாகும்.
நவராத்திரி வைபவத்தை முன்னிட்டு அம்மன் தினமும் ஒரு அலங்காரம் என 9 நாட்களும் விதவிதமான அலங்காரங்களில் காட்சி தருவாள். பத்தாம் நாள் விஜயதசமியன்று குழந்தைகளுக்கு இத்தலத்தில் வித்யாரம்பம் செய்வர்.
பிரார்த்தனைகள் :
தீராத பிணியுடன் துன்பத்தை அனுபவிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அக்குழந்தையை அம்மனுக்கு தத்து கொடுத்து விடுவர். பின்னர் அம்மனுக்கு தவிடு கொடுத்து அதற்கு ஈடாக குழந்தையைத் திரும்ப பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தையின் வியாதியினை அம்மன் எடுத்துக் கொண்டு நலத்துடன் கூடிய குழந்தையை அளிப்பதாக ஐதீகம். அப்படி பெற்ற குழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.