மார்கழி மாத குருவார பிரதோஷம்... சிவனையும்... குருவையும் வழிபடுவது சிறப்பு...!!
Markazhi Month vazhipadu
மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.
இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன? அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரியன், தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.
வாழ்வை வளமாக்கும் குருவார பிரதோஷம்...!
நாளை மார்கழி முதல் தேதி (16.12.2021) குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள். இந்த நாளில் ஆலயம் சென்று சிவனை வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான் மற்றும் குருவாரம் என்பதால் நவகிரகத்தில் உள்ள குருபகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணார கண்டு, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால் சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலிய அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.
அபிஷேகப் பொருட்களும், பலன்களும் :
பால் வாங்கி தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் வாங்கி தர தனலாபமும், வளங்களும் உண்டாகும்.
தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும்.
பழங்கள் வாங்கி தர விளைச்சல் பெருகும்.
பஞ்சாமிர்தம் வாங்கி தர செல்வம் பெருகும்.
நெய் வாங்கி கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும்.
இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும்.
எண்ணெய் வாங்கி தர சுகமான வாழ்வும், சர்க்கரை வாங்கி தர எதிர்ப்புகளும் மறையும்.
சந்தனம் வாங்கி தர சிறப்பான சக்திகள் கிடைக்கும்.
மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.
இந்த குருவார பிரதோஷத்தில் சிவனையும், நந்திதேவரையும் மனதார வழிபட்டு, வாழ்வில் வளங்களை பெறுவோம்...!!