மாவிளக்கு திருவிழா... எப்படி கொண்டாட வேண்டும்? மாவிளக்கு எடுத்தல்.!
Mavilakku Thiruvizha celebration
மாவிளக்கு வழிபாடு என்பது இன்றளவும், அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி செய்யும் முக்கிய பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே 'மாவிளக்கு" ஆகும். காணும் இடங்களெல்லாம் நீங்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.
அரிசி (அன்னம்) - பிரம்ம ஸ்வரூபமாகும். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது இந்த அன்னம்தான்.
வெல்லம் என்பது மதுரம். அதாவது இனிமை. அம்பிகை மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.
மாவிளக்கு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களின் அம்மன் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. அந்த வகையில் மாவிளக்கு போடுதல் மற்றும் மாவிளக்கு திருவிழா என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மாவிளக்கு திருவிழா :
திருவிழா சமயங்களில் அவரவர் வீட்டில் செய்யப்பட்ட மாவிளக்கை ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்படும்.
அவ்வாறு வீட்டில் இருந்து எடுத்து செல்லப்படும்போதே ஒரு அகன்ற தாம்பூலத்தட்டில் தேங்காய், வாழைப்பழம், மாவிளக்கு, வெற்றிலைப்பாக்கு, பத்தி, சூடம், பூ, மாவிளக்கின் மீது ஒரு வண்ணப் பூ வைத்தும், விளக்கை எரிய விட்டும் பெண்கள் எடுத்து செல்வார்கள்.
இவ்வாறு செல்லும்போது மேள தாளம் வாசித்து ஊரைச் சுற்றி கோலாகலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள் பெண்கள். அங்கு பூஜை செய்து மாவிளக்கை இறைவனுக்கு படைத்தும், வேண்டிக்கொண்டும் வீடு திரும்புவார்கள்.
மாவிளக்கு போடுதல் :
தீர்த்தக்குடம் எடுத்தலுக்கு அடுத்த நாள் மாவிளக்கு பூஜை நடைபெறும்.
இடித்தெடுத்த பச்சரிசி, மண்டை வெல்லப் பாகு, ஏலக்காய் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நல்லெண்ணெய் ஊற்றி திரிப் போட்டு விளக்கேற்றப்படும்.
மாவிளக்கு எரிந்து முடிந்து, வழிபாட்டை முடித்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நைவேத்தியம் படைக்க வேண்டும். தேங்காய் நீரை மாவில் விட்டு கலந்து பிசைந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.
மாரியம்மன் கோவிலில் குழந்தைகளைப் படுக்க வைத்து வாழை இலையை அடியில் வைத்து குழந்தைகளின் கை, மார்பு, வயிறு போன்றவற்றில் மாவிளக்குப் போடும் வழக்கம் உள்ளது.
மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.
English Summary
Mavilakku Thiruvizha celebration