கருணை புரியும் நிலையில் அம்மன்.. பன்னிரு ராசிகளின் புடைப்பு சிற்பங்கள்.. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.!
Today special Coimbatore mariyamman temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னமநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தென்னமநல்லூர் என்னும் ஊர் உள்ளது. தென்னமநல்லூர் பேருந்து நிறுத்ததில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் புன்னகை ததும்பும் முகத்துடன் கருணை புரியும் நிலையில் காட்சியளிக்கிறாள்.
கருவறை வாயிலின் இருபுறமும் துவார சக்திகள் கம்பீரமாக காவல் புரிகின்றனர்.
அர்த்த மண்டபத்தில் அம்மனின் வாகனமான சிம்மம் அடர்ந்த பிடரியுடன் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. அதன் பின்புறம் அம்மனின் ஆயுதமான சூலத்தைக் காணலாம்.
நொய்யல் நதி என்றழைக்கப்படும் காஞ்சி மாநதியின் வடபுறம் இத்தலம் அமைந்துள்ளது.
மகா மண்டபத்தின் கிழக்குப்புறம் மாகாளியம்மன் சன்னதியும், மேற்குப்புறம் சீதா, ராமர் மற்றும் லட்சுமணன் ஆகியோர் சன்னதிகளும் உள்ளன.
வேறென்ன சிறப்பு?
துவார சக்திகளின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகனுக்கு தனிச்சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோயிலில் பன்னிரு ராசிகளின் புடைப்பு சிற்பங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.
கோஷ்டத்தில் பிரம்மஸ்ரீ வைஷ்ணவி மற்றும் கவுமாரி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
கோஷ்டத்தின் வெளிச்சுற்றில் கருப்பராயர், கன்னிமார்கள், கன்னிமூல கணபதி ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்கின்றனர்.
வடக்கு நோக்கியுள்ள நுழைவு வாயிலில் மிகவும் விலாசமான 12 தூண்கள் தாங்கி நிற்கும் மகா மண்டபம் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தமிழ் வருடப்பிறப்பு, ஆடி வெள்ளி, தைப்பூசம், நவராத்திரி, மார்கழி மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தைப்பேறு இன்மை, கண் நோய் மற்றும் அம்மை நோய் ஆகியவற்றில் இருந்து விடைபெற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special Coimbatore mariyamman temple