தினம் ஒரு திருத்தலம்..பஞ்சபிரம்ம தீர்த்தம்..தெய்வீக யந்திரம்..அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்.!
Today special Nagapattinam veerateshwarar kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவழுவூர் என்னும் ஊரில் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் உள்ள திருவழுவூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்ட வீரட்டத் தலங்களில் இது 6வது தலம்.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். சப்தகன்னியரில் வராஹி வழிபட்ட தலம் இது.
இத்தலத்தின் விசேஷ மூர்த்தி கஜசம்ஹார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்ஹார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்ஹார மூர்த்தி விளங்குகிறார்.
வேறென்ன சிறப்பு?
சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிச்சிறப்பு.
இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.
இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்ஹார மூர்த்திக்கு பின்புறம் உள்ள தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாசிமகம் - யானை சம்ஹார ஐதீக நிகழ்ச்சி 10 நாட்கள் திருவிழா, தினமும் இரண்டு வேளை வீதியுலா, 9ம் நாள் யானை சம்ஹார நிகழ்ச்சி, 10ம் நாள் தீர்த்த வாரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் மிகச் சிறப்பான திருவிழா ஆகும்.
மார்கழி திருவாதிரை, புரட்டாசி திருவிழா 3 நாட்கள், நவராத்திரி திருவிழா, கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றை இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
கஜசம்ஹார மூர்த்திக்கு பின்புறம் உள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
கல்யாண வரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாற்றுதல், சுவாமிக்கு சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் செய்யலாம்.
அம்மனுக்கு புடவை சாற்றுதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாற்றுதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.
English Summary
Today special Nagapattinam veerateshwarar kovil