கடல் மண்ணை எடுத்து வேண்டினால் நல்லது நடக்குமா? - எங்கே உள்ளது இந்த அதிசய கோவில்.!
uvari sri suyambulinga swami temple story
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். இந்தக் கிராமத்தில் தூத்துக்குடியில் இருந்து கன்யாகுமரி செல்லும் சாலையில், தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயில். கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணியத் தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.
இந்தக் கோயில் எப்படி உருவானது? அப்பகுதியில் உள்ள யாதவ குல மக்கள் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர். அதில் ஒரு மூதாட்டி, அப்பகுதியில் உள்ள கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதபடி ‘என்ன பொழப்பு இது. தினமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானை உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஓடுறதே வேலையாப் போச்சு! வயதான காலத்துல எனக்கு கண்ணும் தெரியல, மண்ணும் தெரியல என்று புலம்பி விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்.
இதைக்கேட்டு ஆவேசமான மூதாட்டியின் கணவர், அரிவாளால் கடம்பமரத்தின் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அதிலிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. இதைப்பார்த்து அரண்டு போன அவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். உடனே ஊர் மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து ஒன்று கூடினர்.
அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்து, ‘வந்திருக்கிறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, சந்தன மரத்தையும் கூறினார். அதன் படி மக்கள் சந்தனத்தை அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது.
பின்னர் அந்த இடத்திலேயே சிறிய கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினார்கள். அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, மண்டபம் கட்டி, சந்நிதி அமைத்து, ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இந்தக் கோவிலின் கடற்கரை மணலை கையில் எடுத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது காலம்காலமாக அழியாத ஒன்றாக உள்ளது.
English Summary
uvari sri suyambulinga swami temple story