ஸ்ரீ ரங்கத்தில் கோலாகலமாக தொடங்கிய வைகுண்ட ஏகாதேசி திருவிழா.!
vaikunda ekathesi festival start from today in sri rangam temple
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் பத்தின் முதல் நாளான இன்று முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இதைத் தொடர்ந்து பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளித்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.
இந்த பகல்பத்து உற்சவம் வருகிற 22-ந் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
English Summary
vaikunda ekathesi festival start from today in sri rangam temple