கோலாகலமாக நடந்த வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Vayalur Murugan Temple Kumbabhishekam Thousands of devotees have darshan!
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அப்போது திரண்டு இருந்த மக்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான திருச்சி அருகே வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின.
ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து 15-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 16-ந்தேதி மாலை முதற்கால யாகபூஜையும், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இந்தநிலையில் இன்று புதன்கிழமைஅதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.அதன் தொடர்ச்சியாக காலை 7.20 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக காலை 9.15 மணிக்கு சகல விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திரண்டு இருந்த மக்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர்பக்தி பரவசமடைந்தனர் . இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் புனித நீர் பக்தர்களுக்கு எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
English Summary
Vayalur Murugan Temple Kumbabhishekam Thousands of devotees have darshan!