தைப்பூச திருநாள் எதனால் கொண்டாடப்படுகிறது..? அறுபடை வீடுகளில் தைப்பூசம் வரலாறு உள்ளே ..! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் புண்ணிய திருவிழாக்களில் ஒன்றாகத் திகழ்வது தைப்பூசம். இது, தை மாதத்தில் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளில், அல்லது அதை ஒட்டிய தினத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாகும். அன்றைய நாளில், முருகனின் ஆறுபடை வீடுகளில், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பாக விழாக்கள் நடைபெறும். 

தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பலவிதமான காவடி சுமந்து, பால்குடம் சுமந்து முருகனை ஆராதிக்கிறார்கள்.

ஆக இந்த தைப்பூச திருவிழா பற்றிய புராண கதைகள் மற்றும் அறுபடை வீடுகளில் தைப்பூசம் கொண்டாடும் விதம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தைப்பூசம் திருவிழா 

புராணக் கதையின் படி, தேவர்களும் அசுரர்களும் மோதிய போரில், தேவர்கள் தோல்வியைத் தழுவினர். அசுரர்களின் கொடுமையால் பெரிதும் துன்புற்ற தேவர்கள், பரம சிவனை நாடி, அவர்களால் வெற்றியடைய முடியாததை தெரிவித்தனர். அப்போது, ஆதியந்தமில்லாத சிவபெருமான், தனது அதீத சக்தியால் ஒரு அதிவிசேஷமான அவதாரத்தை உருவாக்கினார்.
 
சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து பிறந்த ஆறு தீப்பொறிகள், பின்னர் ஆறு அழகிய குழந்தைகளாக வெளிப்பட்டன. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் பராமரித்தனர். பின்பு, அவை ஒன்றாக இணைந்து ஆறுமுகத்துடன் தோன்றியது. அவ்வாறு அவதரித்த இறைவனே கந்தன், முருகன் என புகழப்படுகிறார்.

சகல அறத்தின் திருநாயகனான முருகப்பெருமானுக்கு, பார்வதி தேவியால் ஞானவேல் வழங்கப்பட்ட புனித நாள் தைப்பூச நாளாகும். இதனாலேயே பழனி முருகன் கோவிலில் இந்த திருவிழா மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
 
முருகப்பெருமான், அன்னையால் அளிக்கப்பட்ட வேலை ஆயுதமாகக் கொண்டு, அசுரர்களை வீழ்த்தி, தேவர்களுக்கு நிம்மதி அளித்தார். திருச்செந்தூரில் அசுரர்களை அழித்து, தேவர்களின் அமைதிக்காக போராடிய முருகன், அருளும், சக்தியும் ஒருங்கே பொருந்திய தெய்வமாக வணங்கப்படுகிறார்.

01) திருப்பரங்குன்றம் - Thiruparankundram ( முதலாம் படைவீடு )

சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம். முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். தைப்பூசத்தன்று பௌர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

 

02- திருச்செந்தூர்- Tiruchendur ( இரண்டாம் படைவீடு )

அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலம். அறுபடை வீடுகளில் 02-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வருகிற 11-ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 01 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஒன்றரை மணிக்கெல்லாம் விஸ்வரூப தீபாராதனையும், நான்கு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 06 மணியிலிருந்து ஆறரை மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறப்போகிறது.

 

03- பழனி - Palani ( மூன்றாம் படைவீடு )

மாங்கனிக்காக விநாயகரிடம் போட்டியிட்டு, தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம். தைப்பூச திருவிழா தோன்ற காரணமான பழனி திருத்தலத்தில் தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்துடன் நிறை சந்திரன் கூடும் நாளில் கொண்டாடப்படுகிறது. 

முருகனின் அறுபடை வீடுகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படை வீடான பழனியில் நடக்கும் தேரோட்டம் மிகவும் விசேஷமானது. அன்று விடிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். 

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் பிப்ரவரி 05, 2025 கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்ரவரி 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி தங்க தேரோட்டமும் நடைபெறும். 14-ஆம் தேதி தெப்ப உசவமும் நடைபெறும். பழனிக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து, காவடி எடுத்து, பாதயாத்திரை சென்று நிறைய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

 

04- சுவாமிமலை - Swamimalai ( நான்காம் படைவீடு )

தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாகா காட்சி தந்த திருத்தலம். கும்பகோணம் அருகே உள்ள நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வகையான வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறும். கோவில் உள்ளே உள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்த வாரியம் நடைபெறும்.

 

05- திருத்தணிகை - Tiruttani ( ஐந்தாம் படைவீடு )

திருத்தணி சூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணம் புரிந்த திருத்தலம். ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருந்தும், காவடி எடுத்தும் வருகின்றனர். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடி கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூச நன்னாளில் அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும்.

 

06- பழமுதிர்ச்சோலை - Pazhamudircholai ( ஆறாம் படைவீடு )

ஔவைக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழம் உதிர்த்து தந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்த திருத்தலம். அழகர் கோவில் மலை மேல் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 02-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மேளதாளங்கள் முழங்க யாகசாலை பூஜைகளும், மாலையில் சுவாமி பூத வாகனம், அன்ன வாகனம், காமதேனு, ஆட்டுக்கிடாய் வாகனம், யானை, குதிரை வாகனங்களில் பிரகாரத்தில் எழுந்தருளுகின்றார். 11-ஆம் தேதி தைப்பூசத்தன்று மாலையில் தீர்த்த வாரியும் நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is Thaipusam celebrated and the history of Thaipusam in Arupadai Veetu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->