2வது ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா மிரட்டல் பந்துவீச்சு.. 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.!
2nd ODI match India target of 118 runs against australia
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் பௌலிங் தேர்வு செய்தார்.
அணியில் மாற்றம்
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா இன்று இஷான் கிஷானுக்கு பதிலாக களமிறங்குகிறார். அதேபோல், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் படேல் விளையாடுகிறார்.
அதேபோல், ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஷ்க்கு பதிலாக நாதன் எல்லீஸ் மற்றும் அலெக்ஸ் கேரி விளையாடுகின்றனர்.
117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரின் 3வது பந்தில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின்னர் ரோஹித் சர்மா - விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் ரோஹித் சர்மா 13 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சூரிய குமார் யாதவ் அடுத்த பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய கேஎல் ராகுல் 9 ரன்களிலும், பாண்டியா 1 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். 5 விக்கெட் வீழ்ந்தாலும் விராட் கோலி இருக்கிறார் என நம்பிக்கை வைத்த நிலையில், கோலியும் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர்.
அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், இந்திய அணியின் அக்சர் படேல் 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், சீன் அப்பாட் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.
English Summary
2nd ODI match India target of 118 runs against australia