படு மோசமாக சொதப்பிய சி.எஸ்.கே; தோனியை விமர்சியுங்கள்.. ஆனால் இப்படி அல்ல; இர்பான் பதான் அதிரடி..!
CSK suffered a terrible defeat Criticize Dhoni but not like this Irfan Pathan
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 05 லீக் போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. புள்ளி பட்டியலில் 09-வது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருவதோடு, குறிப்பாக மகேந்திரசிங் தோனி, ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இன்று சேப்பாக்கத்தில் நடக்கும் கொல்கொத்தாவிற்கு இடையிலான போட்டியிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாக திணறி வருகிறது. 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில், 43 வயதான தோனி பேட்டிங்கில் இறுதி கட்டத்தில் இறங்கி அணிக்கு தோல்வியை கொடுத்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் தோனி குறித்து மோசமான மீம்ஸ்களை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தோனி சிறப்பாக செயல்படாமல் போனால் அதற்காக விமர்சனம் செய்யுங்கள், ஆனால் அதற்காக இந்தியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை மரியாதை குறைவாக பேசாதீர்கள் என்று இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது; நான் எல்லோருக்கும் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. தோனியை விமர்சிக்கலாம். புள்ளி விவரங்களை கொண்டு அவரை நேரடியாக விமர்சிக்கலாம். நாம் பெரிய வீரர்களை விமர்சிக்கிறோம். ஒரு வீரர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரை நாம் விமர்சிக்கலாம். ஏனெனில் ரசிகர்கள்தான் இந்த விளையாட்டின் மிகப்பெரிய பங்குதாரர்கள், அவர்களுக்கு அதிகபட்ச உரிமை உண்டு.

ஆனால் அதற்காக அவர்கள் ஒருவரை அவமதிக்கக்கூடாது. அவர்கள் அந்த எல்லையை மீறக்கூடாது. எம்.எஸ். தோனி ஒரு பெரிய வீரர், ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர். அவர் ஒரு முன்னாள் இந்திய கேப்டன், அவரது தலைமையில் அணி நிறைய கோப்பைகளை வென்றது, அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் இப்போது மேட்ச் வின்னர் அல்ல, அவரால் இப்போது மேட்ச்களை வெல்ல முடியாது.
ஆம், நாம் அதை விமர்சிக்க வேண்டும். ஆனால் சமூக ஊடகங்களில் நான் பார்க்கும் மீம்ஸ்கள், தயவுசெய்து அதை செய்ய வேண்டாம். புள்ளி விவரங்களுடன் பேசுங்கள் நான் உங்களை ஆதரிப்பேன். நாங்களும் விமர்சிப்போம். ஆனால், மரியாதையுடன் அதனை செய்யுங்கள். அதுதான் உங்கள் அனைவருக்கும் எனது அறிவுரை" என்று கூறியுள்ளார்.
English Summary
CSK suffered a terrible defeat Criticize Dhoni but not like this Irfan Pathan