ஆர்சிபி-யின் அதிரடி; 17 ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் சொதப்பிய சிஎஸ்கே..!
RCB's action CSK lost at home
ஐ பி எல் தொடரில் பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 32 ரன்கள் எடுத்த போது தோனி ஸ்டம்பிங்கில் வெளியேற்றினார். தேவ்தத் படிக்கல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி ஆட்டக்காரர் விராட் கோஹ்லி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 10, ஜிதேஷ் ஷர்மா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 18-வது ஓவரில், அரைசதம் அடித்த கேப்டன் ரஜத் படிதர் 51 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதே ஓவரில், க்ருனல் பாண்டியா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்ப்பாக நூர் அஹமது 03, பதிரானா 02 விக்கெட் வீழ்த்தினர். 197 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே சொதப்பி வந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 05, கேப்டன் கெயிக்வாட் 0,தீபக் ஹூடா 04, சாம் கரன் 08 ரன்களுக்கு என எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்து போல்டாகி ஆட்டமிழந்தார். சிவம் தூபே 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா 25 ரன்களிலும், அஸ்வின் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வந்த முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்து சிறந்த கேமியோ கொடுத்தார். இறுதியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் 09 முறை மோதி உள்ளன. அதில் 08 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரிமீயர் லீக் வரலாற்றில் இரு அணிகளும் 33 முறை மோதி உள்ளன. அதில், 21 முறை சென்னை அணியும், 11 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்று உள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
RCB's action CSK lost at home