ஈரோடு : தனியார் பனியன் கம்பெனி பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் படுகாயம்
10 injured Private Company bus accident in erode
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன் கம்பெனி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம்போல் இன்று காலை 8 மணியளவில் கம்பெனி பேருந்து நம்பியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது நம்பியூர் அருகே சென்ற போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நம்பியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10 injured Private Company bus accident in erode