வரலாற்று சாதனை! 1,000வது இந்து கோவிலுக்கு குடமுழுக்கு விழா! தமிழக அரசு பெருமிதம்!
1000th kudamuzhuku on behalf of TNHREC in Chennai
திமுக இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக வலதுசாரி அமைப்புகளும், பாஜகவினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லி, பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் 262 பிரபலங்கள் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க திமுக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கோவில் சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தை முறையாக கோவில் பராமரிப்பு பணிக்கு செலவிடுவதில்லை என வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையே திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்பொழுது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,000வது குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவானது இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நடைபெறும் இந்த 1,000வது குடமுழுக்கு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இது பல்வேறு விமர்சனங்கள் முன்வைத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலை துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா நடைபெறுவது ஒரு வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
1000th kudamuzhuku on behalf of TNHREC in Chennai