அட பாவமே!!! கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 46 வயது நபர்...!!!
46 year old man committed suicide due debt
இன்று காலை மதுரை கருப்பாயூரணி அருகேயுள்ள கண்மாய் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் மதுரை செல்லூர் அருகேயுள்ள எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்த வேலு மகன் கணேசன் (வயது 46) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
இவர் சிம்மக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இதில் பழக்கடையை நடத்துவதற்காக திண்டுக்கல் கோபால்பட் டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக தினமும் சுமார் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டியும் பல வருடங்களாக கட்டி வந்துள்ளார். சிலகாலமாக தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வட்டி சரியாக கட்ட முடியாமல் பல நாட்களாக விரக்தியில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.அத்துடன் கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார்.
பெரும்பாலான வட்டியை செலுத்திய நிலையில் கடன் கொடுத்தவர் அடமான பத்திரத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால், அவருக்கு சொந்தமான 2 கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கணேசன், இன்று காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கருப்பாயூரணி அருகேயுள்ள கண்மாய் அருகே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் பழக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
46 year old man committed suicide due debt