காரைக்குடியின் அடையாளம்..! ஆயிரம் ஜன்னல் வீடு..!!
aayiram jannal veedu
சிவகங்கையிலிருந்து ஏறத்தாழ 59கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய கலைநயமிக்க வீடுதான் ஆயிரம் ஜன்னல் வீடு.
சிறப்புகள் :
ஆயிரம் ஜன்னல் வீடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாடு வீடுகளில் ஒன்றாகும்.
இது காரைக்குடியின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. சிமெண்ட் கலவையை பயன்படுத்தாமல், காரைக்குடி பகுதிக்கே உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள வீடுகளின் கட்டமைப்பு, கலையம்சம் மற்றும் பன்முக பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காரைக்குடி, பாரம்பரியம் மிக்க நகரமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டின் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், 'ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு' என்ற அர்த்தத்தில் வரும்.
இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
மிகப்பெரிய அறைகள், விசாலமான நடுக்கூடம், மண்டபங்கள், உணவு பரிமாறும் இடம், பர்மா தேக்குக் கதவுகள், ஜன்னல்கள், இத்தாலி சலவைக்கற்கள், இயற்கை வண்ணப் பூச்சு ஓவியங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
விதவிதமான விளக்குகள் என எங்கெங்கும் பிரமிப்பாய் சுமார் 20,000 சதுர அடியில் மிக பிரம்மாண்டமாகவும், விசாலமாகவும் அமைந்துள்ளது. இவ்வீட்டின் சாவியே தோராயமாய் ஒரு அடி நீளம் இருக்கும்.
இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. இவ்வீட்டின் மரவேலைப்பாடுகள் பர்மா தேக்கு மரங்களைக் கொண்டும், ஆத்தங்குடி மற்றும் இத்தாலிய சலவை கற்களைக் கொண்டு தரை வேலைப்பாடுகளும் அமைந்துள்ளது.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வண்ண பூச்சுக்களும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விளக்குகள் இவ்வீட்டிற்கு அழகு சேர்க்கின்றன.