சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்பி! அமிதாஷாவுக்கு பரபரப்பு கடிதம்!
ADMK MP Thambidurai letter to Amit shah for Krishnagiri fire accident CBI inquiry
9 பேரின் உயிரை பறித்த கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்திற்கு காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பா? அல்லது பட்டாசு வெடிப்பா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்திற்கு போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐ ஆர்) சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் அறிக்கையிலும் இதே தகவல் தான் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
நேற்று பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு கேஸ் சிலிண்டர் காரணம் இல்லை என்றும், தமிழக அரசு இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்து வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, அதிமுக எம்பி தம்பிதுரை உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, சட்ட விரோத கல் குவாரிகளுக்கான வெடி மருந்துகளை பதுக்கியதே இந்த வெடி விபத்திற்கு காரணம் என்று, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், பட்டாசு கடை அருகில் உணவு கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தான் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளின் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியான உணவகத்தின் உரிமையாளர் மகன் தெரிவிக்கையில், எனது தாயாரின் உடலில் சிறு தீக்காயங்கள் கூட இல்லை. அவர் மீது சுவர் விழுந்துதான் உயிரிழந்துள்ளார். எங்கள் உணவகத்தில் உள்ள சிலிண்டர்கள் இரண்டும் முழுமையாக எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே உள்ளது. ஆனால் இவர்கள் சிலிண்டர் வெடித்து தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பொய் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK MP Thambidurai letter to Amit shah for Krishnagiri fire accident CBI inquiry