இருசக்கர வாகனத்தில் சாகசம்..வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீசார்!
Adventure on a bike Police impound vehicles and impose fines
குளச்சலில் ஓட்டுநர் உரிமம் இன்றி சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு ரூபாய் 23000 அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) அவர்களின் மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல்ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிதம்பர தாணு, சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் குளச்சல், மணவாளக்குறிச்சி, திங்கள்நகர் மற்றும் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லூரி மாணவர்கள் சாலையில் சாகசம் செய்து கொண்டு ஆபத்தான முறையில் வந்து கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை தடுத்து சோதனை செய்தபோது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்குதல் ( பிரிவு 181), தகுதி இல்லாத நபரை வைத்து வாகனம் இயக்கியது (பிரிவு 180 ), ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது (பிரிவு 184), தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கியது (பிரிவு 194D), மூன்று நபர்களை ஏற்றி வாகனத்தை இயக்கியது (பிரிவு 194C ),வாகனத்தை நிறுத்த கூறி நிறுத்தாமல் சென்றது ( பிரிவு 179 ) வாகனத்தை இயக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து ₹ 23,000 அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து காவல் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் இளைஞர்கள் சாலையை விளையாட்டு மைதானம் என நினைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் இதனால் உயிரிழப்பு மற்றும் உடல் பாகங்களின் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். இன்றைய தினம் குளச்சல் போக்குவரத்து காவல்துறையினர் 200 மோட்டார் வாகன வழக்குகளும் 2 குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் பிரிவில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
English Summary
Adventure on a bike Police impound vehicles and impose fines