இடஒதுக்கீடு பிரச்சனையில் அரங்கேறிய அநீதி... அதிரடி நடவடிக்கையை துவங்கிய அன்புமணி.!!
Anbumani ramadoss wrote letter about MBC quota medical seats
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால் அப்பிரிவினருக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியை சுட்டிக் காட்டியும், அதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டிலேயே 27% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கடிதத்தில், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் & அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதை உடனடியாக சரி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்த தருணத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் சமூக நீதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், போராடிப் பெற்ற பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அர்த்தமற்று போய்விடுமோ? என்ற அச்சமும், கவலையும் தான் இக்கடிதத்தை எழுத வேண்டும் என்ற உணர்வை எனக்குள் விதைத்தன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படாததால் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்குகிறேன். 2020-21 ஆம் மருத்துவக் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக 9550 இடங்கள் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் (Directorate General of Health Services - DGHS) நடத்திய கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் பட்டியலினத்தவருக்கு 1385 (14.50%) இடங்களும், பழங்குடியினருக்கு 669 (7.00%) இடங்களும் கிடைத்துள்ளன. பட்டியலினம், பழங்குடியினருக்கு அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் இந்த எண்ணிக்கை அமைந்திருக்கிறது.
மீதமுள்ள இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 7125 இடங்கள் அதாவது 74.60% இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கான இடங்களில் 653 (7.00%) இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர்த்த 371 இடங்கள், அதாவது 3.8% இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences), வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி (Vardhman Mahavir Medical College -VMMC), லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி (Lady Hardinge Medical College), பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ. முதுநிலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ESI Post Graduate Institute of Medical Science and Research) போன்ற மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் பட்ட 27% இட ஒதுக்கீட்டின் மூலம் தான் இந்த இடங்களாவது பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்துள்ளன.
அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் படும் 27% இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தால், முதற்கட்டமாக நிரப்பப்பட்ட 9550 இடங்களில் 2579 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பெறப்பட்ட இடங்களுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும்; ஆனால், மாநில அரசு கல்வி நிறுவனங்களிடமிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பெறப்பட்ட இடங்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் கொள்கை நிலைப்பாடு நியாயமானதல்ல.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருவேளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில் இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன்மூலமே உண்மையான சமூகநீதியை உறுதிப்படுத்த முடியும்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 24 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் 1758 இடங்கள் உள்ளன. அவற்றில் 50%, அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50% இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஓர் இடம் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப் படவில்லை. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதை செயல்படுத்த வேண்டியதும், அதன் அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியதும் மத்திய அரசின் கடமை ஆகும்.
அதுமட்டுமின்றி, நடப்புக் கல்வியாண்டிலேயே மருத்துவ மேற்படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளையும், தேவைப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்..
Tamil online news Today News in Tamil
English Summary
Anbumani ramadoss wrote letter about MBC quota medical seats