வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் படுகொலை! குற்றவாளிகளை கைது செய்தால் மட்டும் போதாது- பாமக தலைவர் அன்புமணி!
anbumani shocking hear the news murder in delta region inclued vanniyar sanga down leader
காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை தண்டித்து அமைதியை நிலை நாட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைதிக்கும், வளத்திற்கும் பெயர் பெற்ற காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்றவையாக மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கொலைக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தவறி வருவது பெரும் கவலை அளிக்கிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது காவிரி டெல்டா அமைதியான பகுதியாகவே இருந்து வந்தது. இடையில் சில காலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் கூலிப்படைகளின் புகலிடமாக மாறின. சாதாரண பொதுமக்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் செல்வாக்கு படைத்த நிர்வாகிகளும் கூட கூலிப்படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிச் சென்ற சூழலில் தான் காவல்துறை விழித்துக் கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்ட அமைதி நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கும்பகோணத்தையடுத்த சத்திரம் கருப்பூர் பகுதியில் புண்ணியமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் 17 வயது இளம் பெண், மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் ஜீவானந்தம் என கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் உட்பட கடந்த 6 மாதங்களில் காவிரி டெல்டாவில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. டெல்டா அபாயத்தை நோக்கி நகர்வதையே இது காட்டுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை நிகழ்ந்த கொலைகளை விட கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கொலை மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்த வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணனின் படுகொலை ஆகும். ஆம்புலன்ஸ் சேவை நடத்திக் கொண்டு, மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்த கண்ணனை, 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கிறது. கண்ணனை கொலை செய்து விட்டு, அந்த கும்பல் எந்தவித பதற்றமும் இல்லாமல் நடந்து சென்ற காட்சிகள் காணொலியில் பதிவாகியுள்ளன. பா.ம.க. சார்பில் கடுமையான அழுத்தம் தரப்பட்டதைத் தொடர்ந்து தான் குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர்.
வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணனின் படுகொலை எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல.... வெகு காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட படுகொலை ஆகும். மயிலாடுதுறை பகுதியில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கண்ணனை படுகொலை செய்தவர்களை கைது செய்து விட்டால் மட்டும் போதாது. அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வது மட்டுமின்றி, அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மூலம் தான் கொலைகளை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூலிப்படையினர், போக்கிலி கும்பல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குற்றவழக்குகளில் தண்டனைக் கைதிகளாகவோ விசாரணை கைதிகளாகவோ சிறையில் அடைக்கப்பட்டால் கூட, சிறையிலிருந்தே திட்டங்களைத் தீட்டி, வெளியில் உள்ள கூலிப்படை உறுப்பினர்கள் மூலம் கொலை செய்யும் கொடூரம் அரங்கேறுகிறது. இது காவிரி டெல்டா மாவட்டங்களின் அமைதிக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் எந்தவகையிலும் நல்லதல்ல.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூலிப்படைகளை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
anbumani shocking hear the news murder in delta region inclued vanniyar sanga down leader