திருவண்ணாமலை கொள்ளை சம்பவம்.. ஆந்திர பதிவெண் கொண்ட கார் பயன்படுத்தியது அம்பலம்...!!
Andhra registered car was used in thiruvannamalai atm robbery
திருவண்ணாமலை - கலசப்பாக்கம் இடைப்பட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூபாய் ரூ.19.5 லட்சமும், போளூர் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில்ரூ.18 லட்சமும், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.38 லட்சமும், கலசபாக்கத்தில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மில் ரூ.3 லட்சமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் கொள்ளைகள் மொத்தமாக ரூ.72.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக திருவண்ணாமலை காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்டை மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது ஆந்திர மாநிலத்தின் பதிவெண் கொண்ட காரில் மர்ம நபர்கள் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியது தற்பொழுது தெரியவந்துள்ளது. மேலும் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அண்டை மாவட்டமான வேலூர் ஆந்திர எல்லையில் அமைந்துள்ளதால் காட்பாடி பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனம் என்பதால் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary
Andhra registered car was used in thiruvannamalai atm robbery