அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம்.. புதுவையில் அதிமுக போராட்டம்!
Anna University student rape case AIADMK protests in Puducherry
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி அமைத்துக் கொண்டு, பிரச்சனையை திசை திருப்பும் நாடகத்தை நடத்தும் தமிழக விடியா திமுக அரசை கண்டித்தும், எங்கள் கழகப் பொதுச் செயலாளரை பற்றியும், அதிமுகவை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்தும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அண்ணா சிலை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது,தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி திமுக உறுப்பினர் என்பதற்காக இச்சம்பவத்தில் இன்று வரை வாய்மூடி மௌனம் காத்து வருகிறார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
சட்டமன்ற தொடர் நடைபெறும் இச்சமயத்தில் இந்த பிரச்சனையை திசைத்திருப்பும் நோக்கத்தில் தமிழக ஆளுநரை பயன்படுத்தி உப்புசப்பில்லாத ஒரு பிரச்சனைக்காக தமிழகம் முழுவதும் அதிமுகவை எதிர்த்து திமுக அருவறுக்கத்தக்க வகையில் நேற்றைய தினம் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருக்கும் போதே பிஜேபியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என ஆண்மைத்தனமாக கூட்டணி இல்லை என்று அறிவித்து இன்று வரை பிஜேபியுடன் எவ்வித உறவும் இல்லாமல், நம் கழக பொதுச் செயலாளரின் செயல்பாடு உள்ளது.
ஒருபுறம் தமிழகத்தில் பிஜேபியை விமர்சனம் செய்து கொண்டே மறுபுறம் தனது புதல்வர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர்களை பல்வேறு விழாக்களுக்கு இங்கு அழைத்து வந்து உள்ளுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வது திமுகவின் பாஜக ஆதரவின் இரட்டை வேடத்தின் சான்றாகும்.
தற்போது கூட தமிழகத்தின் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் முறைகேடுகள் சம்பந்தமாக அமலாக்கத்துறையின் சோதனையை தடுத்து நிறுத்த துரைமுருகன் டெல்லிக்குச் சென்றது ஏன்? டெல்லிக்கு சென்று அவர் யாரை சந்தித்து பேசினார் என்பது தெரியவில்லை. அதன்பிறகு உடனடியாக அமலாக்கத்துறை ரெய்டு நிறுத்தப்பட்டது எப்படி? இவையெல்லாம் பாஜகவுடன் திமுகவால் போடப்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின் வெளிப்பாடாகும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆளும் மைனாரிட்டி பிஜேபி ஆட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற உத்தரவாதத்தை பிஜேபியிடம் அளித்து விட்டு கூட்டணி இல்லை என்று ஆணித்தரமாக பேசும் எங்களைப் பற்றி திமுக குறை கூறுவது வெட்கக்கேடான செயலாகும். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, பாலியல் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திசைத்திருப்பும் விதமாக தமிழக ஆளுநரை திமுக அவ்வப்போது பயன்படுத்தி வருகிறது. எதாவது ஒரு மக்கள் விரோத பிரச்சனை ஏற்படும்போது தமிழக மக்களுக்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் நேர் எதிரான ஒரு கருத்தை ஆளுநர் மூலம் பேச வைத்து அந்த பிரச்சனையை மடைமாற்றம் செய்வதில் திமுக முனைப்போடு இருக்கிறது.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியின் பாஜகவை சேர்ந்த சபாநாயகர் மீது 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அது சம்பந்தமாக பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் பாராளுமன்ற செயலாளருமான திரு. ஜான்குமார் அவர்களிடம் நிரூபர்கள் கேள்வி கேட்ட போது சட்டப்பேரவையில் எங்கள் சபாநாயகருக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுகவும் எங்களை ஆதரிக்கிறது என திமுக எதிர்கட்சி தலைவர் திரு.சிவா அவர்களின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார். புதுச்சேரி பாஜக அரசை காப்பாற்ற திமுக எங்களுக்கு துணை நிற்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பகீரங்கமாக பேட்டியளிக்கும் விதத்தில் திமுக பாஜகவின் உறவு உள்ளது. ஆனால் இவையெல்லாம் மூடி மறைத்துவிட்டு அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் திமுக பேசுவது கண்டிக்கத்தக்கதாகும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில் தொடர்படைய குற்றவாளி கூறிய அந்த சார் யார் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பும் போது, சார் யார் என்று கேள்வி கேட்பவர்கள் தான் அந்த சார் என ஆணவத்தின் உச்சத்தில் திமுக பேசுகிறது. இக்கருத்தை வலியுறுத்திய விசிகவையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் மறைமுகமாக திமுக குற்றம்சாட்டுவதாக தெரிகிறது.
தற்போது கூட தமிழக ஆளுநரை கண்டிப்பதாக போராட்டம் நடத்தும் திமுகவினர் உண்மையில் தமிழக ஆளுநரைப் பற்றி விமர்சனம் செய்யாமல் எங்களின் கழக பொதுச் செயலாளர் பற்றியும், அதிமுகவைப் பற்றியும் விமர்சனம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில் மக்களை ஏமாற்றி திசைத்திருப்பும் செயலல்லவா?
சொல் ஒன்று செயல் ஒன்றாக வாழாத மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் வந்தவர் எங்களது மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள். பிஜேபியுடன் கூட்டணி உண்டு என்றால் உண்டு என்று சொல்வார், இல்லையென்றால் இல்லை என்று தைரியத்துடன் கூறுவார். அதற்காக அவர் திமுக போன்று இரகசியமாக மண்டியிட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், அமைதி பேரணி நடத்தவும் அனுமதி கேட்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி அளிக்காத தமிழக விடியா திமுக அரசு, தமிழக ஆளுநரையும், அதிமுகவையும் கண்டித்து பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி? தமிழகத்தில் காவல்துறை மூலம் அறிவிக்கப்படாத அவசரகால நிலைமையை அதிமுக மீது திமுக கட்டவிழ்த்துள்ளது. இதற்கெல்லாம் அதிமுகவின் அடிமட்ட தொண்டன் கூட பயப்படமாட்டான். உண்மை வெல்லும், சத்தியம் ஜெயிக்கும் என்பதை காலம் பதிலளிக்கும்.
வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து சர்வாதிகார ஆட்சி நடத்தும் திமுகவிற்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டு வருவார்கள் என்றார்.
English Summary
Anna University student rape case AIADMK protests in Puducherry