#தமிழகம் | 1000 ஆண்டு கால கோயிலின் உள்ளே புகுந்து சிலைகள் உடைப்பு! அண்ணாமலை கடும் கண்டனம்!
annamalai condemn avinasi hindu temple attack
திருப்பூர் : அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன செய்தியில், "நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை.
கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது.
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு?
உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai condemn avinasi hindu temple attack