ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு : திருவேங்கடம் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு.!
Armstrong Murder Judge Visits Thiruvenkadam Encounter Site
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டிற்கு அருகில் கடந்த ஜூலை 5ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இக்கொலையில் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலக்கி வந்த போலீசார் இது தொடர்பாக 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிய வந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற ரீதியில் கைதான 11 போரையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து தனித் தனியாகவும், குழுவாகவும் விசாரித்து வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் 4 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருவேங்கடத்தை விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் மணலி அழைத்துச் சென்றபோது அவர் தப்ப முயன்றதாலும், போலீசாரை நோக்கி சுட்டதாலும், போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா, என்கவுண்டர் நடந்த இடத்தில இன்று (ஜூலை 15) ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவேங்கடத்தை வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் தனித் தனியாக அவர் விசாரணை நடத்தியுள்ளார். இவை அனைத்தையும் நீதிபதி வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Armstrong Murder Judge Visits Thiruvenkadam Encounter Site