வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்.. புதுச்சேரி இணைய வழிகுற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை!
Bank account and SIM card holders alert. Puducherry Cyber Crime Branch on alert
வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு சம்பந்தமாக பொதுமக்களுக்கு புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது:
அதில் கூறியிருப்பதாவது:பொதுமக்களாகிய தாங்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை (ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை) பயன்படுத்தி தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களுக்கு பழக்கவழக்கத்தின் மூலமாகவோ வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தருவது, பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பது (ரூபாய் 200, 500, 1000, 10,000) மற்றும் பயன்பாட்டிற்கு தரும்பட்சத்தில் இணையவழி குற்றவாளிகள் மேற்படி வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை பயன்படுத்தி இணையவழி குற்றங்களில் ஈடுபடும்பொழுது அதனை வாங்கி கொடுத்த தாங்கள் மேற்படி இணையவழி குற்றங்களில் முதன்மை குற்றவாளிகளாக சேர்க்கப்படுவீர்கள்.
மேலும் தற்பொழுது நடைபெறும் இணையவழி குற்றங்களில் 85% குற்றங்கள் ஆன்லைனில் பணம் இழப்பது (Financial loss) சம்பந்தமாக வருகிறது. அத்தகைய குற்றங்களில் சைபர் குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பித்துகொள்கின்றனர். இவ்வாறு குற்றவழக்குகளில் சிக்கிய நிறைய பொதுமக்கள் சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளனர். இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய குற்றங்களில் சிக்கவைக்கப்படுகின்றனர்.
எனவே பொதுமக்கள் யாரும் தங்களுடைய அடையாள அட்டைகளை (ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை) பயன்படுத்தி தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தரவேண்டாம் என்றும், இணையவழி குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டை பயன்படுத்தி இணையவழி குற்றங்களில் ஈடுபடும்பட்சத்தில், அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணைத்துவிதமான இணையவழி குற்றம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் மற்றும் தகவல் சம்பந்தமாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413 2276144, 9489205246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bank account and SIM card holders alert. Puducherry Cyber Crime Branch on alert