36 கட்சிகள் கூடி பேசினாலும் ஒரு பலனும் இல்லை.. எதிர்க்கட்சிகளை கலாய்த்த வானதி சீனிவாசன்.!! - Seithipunal
Seithipunal


36 கட்சிகள் கூடி பேசினாலும் ஒரு பலனும் இல்லை.. எதிர்க்கட்சிகளை கலாய்த்த வானதி சீனிவாசன்.!!

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை  எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பீகார் மாநில தலைநகர் பட்னாவில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரும் பிகார் முதல் வருமான நிதிஷ்குமார் தலைமையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 15 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பாஜகவை சேர்ந்த பல நிர்வாகிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில்பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கேள்வி பதில் : பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறதே?

ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் வரும்போது, எதிர்க்கட்சிகள் இப்படி கூட்டம் நடத்துவது வழக்கமானதுதான். அதைத்தாண்டி, பாட்னா கூட்டத்தில் முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றதாகச் சொல்கிறார்கள். இதில் காங்கிரஸ் மட்டுமே தேசிய கட்சி. மற்ற கட்சிகள் எல்லாம் ஒரு மாநிலம், இரண்டு மாநிலங்களில் மட்டுமே உள்ள கட்சிகள்.

அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி கூட்டணி வைக்க முடியும். பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பாரா? ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், டில்லி, பஞ்சாபில் காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்குவாரா? மகாராஷ்டிராவில் பிளவுபட்ட உத்தவ் தாக்ககரேவின் சிவசேனா கட்சிக்கு காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப் போகிறது? கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி ஒருபோதும் பதிலே கண்டுபிடிக்க முடியாத கேள்விகள் பல இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடிப் பேசினாலும் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை.

பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் குடும்ப ஆதிக்கம் உள்ள கட்சிகள். ஊழலில் திளைக்கும் கட்சிகள். ஊழலில் இருந்து தப்பித்துக் கொள்ள, மக்களை திசைதிருப்ப ஒருவரையொருவர் துணைக்கு அழைத்துக் கொள்ளவே, ஒன்றுகூடியிருக்கிறார்கள்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடகத்தில் காங்கிரஸும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்தன. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என, பாஜக எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் நம்பினார்கள். ஆனால், கர்நாடகத்தில் 28-க்கு 26 தொகுதகளில் எப்போதும் பெறாத வெற்றியை பாஜக பெற்றது. உத்தரப்பிரதேசத்திலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது.

தேர்தல் அரசியல் என்பது கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. அது ரசாயனம் அதாவது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. தேர்தல் அரசியலில் ஒன்றும் ஒன்றும் இரண்டாக வேண்டிய கட்டாயம் அல்ல. ஒன்றும் ஒன்றும் பூஜ்யமாகவும் மாறும். எனவே, 16 கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டம் இவற்றால் எல்லாம், 2024-ல் பாஜக பெறப்போகும் ஹாட்ரிக் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

ஏனெனில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்த சாதனைகள், மக்களை நம்பிதான் பாஜக தேர்தல் களத்தில் நிற்கிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவராக உயர்ந்துள்ளார். பொருளாதாரத்தில் உலகின் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 2024-ல் பாஜக ஆட்சியை தக்க வைத்தால் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துவிடும். இதனை குமரி முதல் இமயம் வரை உள்ள மக்கள் அனைவரும் அறிவார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp vanathi seenivasan tweet about opposition party meeting in patna


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->