இலங்கை கடற்படையை தொடர்ந்து பிரிட்டிஷ் கடற்படை: சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!
British Navy Tamilnadu fishermen captured
கன்னியாகுமரி மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலில் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவர்.
அது போல் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சைமன் என்பவருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் கடந்த 15ஆம் தேதி சின்னதுரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்கள் மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 32 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 27ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பிரிட்டிஷ் கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 32 தமிழக மீனவர்களை சிறை பிடித்தனர்.
பின்னர் அவர்களை இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவிற்கு கொண்டு சென்று 32 மீனவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து தகவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீனவ குடும்பத்தினர், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
British Navy Tamilnadu fishermen captured