சென்னையில் பூத் சிலிப் வழங்கும் பணி மூன்று நாட்களில் நிறைவடையும். மாநகராட்சி ஆணையர் தகவல்.!
Chennai Booth Slip
சென்னையில் பூத் சிலிப் வழங்கும் பணி மூன்று நாட்களில் நிறைவு பெறும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில்
மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர்
திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.02.2022) நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.02.2022) ரிப்பன் மாளிகையில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது :
வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பே நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு முறையாக தேர்தல் விதிப்படி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா என்பதனையும், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டப்படுகிறதா என்பது குறித்தும், வேட்பாளர்களின் ஐயம் தீர்த்த பின்பு வாக்குப்பதிவு துவங்குகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும். வாக்காளர்களின் வாக்குப்பதிவு இரகசியம் காக்கும் வண்ணம் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனையும், வாக்குப்பதிவின்போது மையங்களில் நடைபெறும் சம்பவங்களை கூர்ந்து கவனித்திட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு மற்றும் வாக்களிக்க வராமல் இருக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்களை கண்காணித்திட வேண்டும். நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தினை வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் பூர்த்தி செய்து வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று தேர்தல் பொதுப்பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி வாக்களிக்கிறார்களா என்பதனையும், சுயமாகவும் சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் கண்காணித்து அறிக்கை தரவேண்டும். நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்-2022யை முன்னிட்டு, 5000 மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக மட்டுமே வீடுகள்தோறும் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று நாட்களில் நிறைவு பெறும். மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தேர்தல் பார்வையாளர்கள் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) அவர்கள், முனைவர் டி.மணிகண்டன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) அவர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/’துணை ஆணையாளர்கள் திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) அவர்கள், திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.