விதிகளை மீறி பொது இடங்களில் விளம்பரம் செய்தால் சட்ட நடவடிக்கை! சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டுவதையும், பெயர் பலகைகளில் விளம்பரங்கள் செய்வது மற்றும் சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கு ரூ. 2,03,760/- அபராதமும் விதிக்கப்பட்டு, காவல்நிலையத்தில் 161 புகார்கள் பதியப்பட்டுள்ளன. 

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 471 பேருந்து சாலைகள் மற்றும் 34640 உட்புற சாலைகள் உள்ளன. 

இந்தச் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் சேதமடைந்த பெயர் பலகைகள் மற்றும் பெயர் பலகை இல்லாத சாலைகள் அல்லது தெருக்களில் மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சாலை (அ) தெருவின் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண், அஞ்சல் குறியீடு மற்றும் சிங்கார சென்னை 2.0 சின்னம் உட்பட்ட விவரங்களுடன் டிஜிட்டல் முறையில் அச்சடிக்கப்பட்ட பிரதிபலிப்பு தன்மையுடன் கூடிய பெயர் பலகை பொருத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 4681 எண்ணிக்கையில் பெயர் பலகைகள் அமைக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,820 எண்ணிக்கையிலான சாலைகளுக்கு பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பெயர் பலகைகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பெயர் பலகைகளில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்கள் செய்யக்கூடாது.

அவ்வாறு விளம்பரங்கள் செய்தாலோ அல்லது பெயர் பலகையை சேதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

ஏற்கனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பொது இடங்கள், தெருக்களின் பெயர் பலகைகள் ஆகியவற்றின் மீது விதிகளைமீறி சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.   

அதனடிப்படையில், மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் கடந்த 16 ஆம் தேதி வரை பொது இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்கள் மேற்கொண்ட நபர்களுக்கு ரூ.2,03,760/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் 161 புகார்கள் பதியப்பட்டுள்ளன. 

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளைமீறி சுவரொட்டிகள் ஒட்டுவதையும், பெயர் பலகைகளில் விளம்பரங்கள் செய்வது மற்றும் சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறையில் புகார் பதியப்பட்டு தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corporation action on advertisement in public places


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->