என்னங்க இப்படி பண்ணுறீங்க? சென்னை மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்த திமுக கூட்டணி கட்சி!
Chennai Corporation meet issue CPIM Condemn
மழை, வெள்ளப் பாதிப்புகளை முழுமையாக விவாதிக்காமல், பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் அவசரகதியில் நடத்தி முடிக்கப்பட்டதாக ஆளும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகரம் கடுமையான மழை, வெள்ளத்தை சந்தித்து மீண்டுள்ள சூழலில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டத்திற்கான அழைப்பிதழ் டிசம்பர் 26ஆம் தேதி மாநகர மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு, மன்றக் கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி காலை அவசர, அவசரமாக நடந்து முடிந்துள்ளது. மாநகர மக்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் சார்ந்து விரிவான விவாதத்தை மாநகராட்சி மன்றத்தில் நடத்தும் வகையில் இம்மன்றக் கூட்டம் அமையவில்லை.
குறிப்பாக, நேரமில்லா நேரத்தில் பேச வேண்டிய 15 மாநகர மன்ற உறுப்பினர்களில் 7 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, கூட்டம் அவசர, அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது. அதிலும், மாநகர மன்ற உறுப்பினர்களுக்கு, மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருள் (ஹபநனேய) மற்றும் குறிப்புகள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98வது மாமன்ற உறுப்பினருக்கு மன்றக் கூட்டம் முடிந்த அடுத்த நாள் தான், குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மன்றக் கூட்டத்தில் மாநகர மன்ற உறுப்பினர்கள் தங்களது வட்டத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் நேர ஒதுக்கீடு அமைய வேண்டும். 150 மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்ட போது, முழுநாள் மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது 200 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள சூழலில், மாநகராட்சி மன்றக் கூட்டம் மாதத்திற்கு அரை நாள் மட்டும் நடத்துவது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து, விவாதிக்க வேண்டிய குறிப்புகளை முன்னமே வழங்கி, அனைவரின் கருத்துக்களையும் எடுத்துரைக்கும் வகையில் நேர ஒதுக்கீடு செய்து, செயல்பட உரிய நடவடிகக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Corporation meet issue CPIM Condemn