ஏசி-யை ஆஃப் பண்ணுங்க! புல்டோசர் இறக்கிய என்எல்சியை கிழித்து தொங்கவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி!
Chennai HC Condemn NLC Issue
என்எல்சி ஒப்பந்ததார தொழிலாளர்கள் மற்றும் என்எல்சிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால், என்எல்சி நிறுவனத்துக்கும், என்எல்சி தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் என்எல்சி நிர்வாகம் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த வாழ்க்கை இன்று மதியம் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்கள், என்எல்சி நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பயிர் விளைந்த விவசாய நிலத்தில் புல்டோசரை இறக்கி கால்வாய் வெட்டும் வீடியோவை பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுதேன். உங்களால் அந்த பயிரை அறுவடை செய்யும் வரை பொறுத்து இருக்க முடியாதா? என்று கேள்வியை வேதனையுடன் என்எல்சி நிறுவனத்திற்கு எழுப்பினார்.
அதற்கு என்எல்சி நிர்வாகம் தரப்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டது. நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை தற்போது பயன்பாட்டுக்கு எடுக்கும் போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய விளக்குகளுக்கும், ஏசிகளுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு என்எல்சியின் முக்கிய பங்கு வகிப்பதாக என்எல்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
என்எல்சி நிர்வாகத்தின் இந்த பதிலால், கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதி தண்டபாணி அவர்கள், 10 வருடமாக காத்திருந்த நீங்கள், அந்த பயிரை இரண்டு மாதத்தில் அறுவடை செய்யும் வரை காத்திருக்கக் கூடாதா?
'வாடிய பயிரை கண்டபோது எல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே இது போன்ற சம்பவம் நடைபெறுவதை காண வேதனையாக உள்ளது.
இந்த நிலத்தை எடுப்பதற்கு என்எல்சி நிர்வாகம் ஆயிரம் காரணங்களை கூறினாலும், பயிர்களை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனிதர்கள் வாழ்வதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் ஆதாரமாக உள்ள பயிர் வகைகளை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இழப்பீடு கொடுத்ததற்காக நீங்கள் பயிர்களை அழிக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாம் உயிரோடு இருக்கும் இந்த காலத்திலேயே உணவு பஞ்சம் ஏற்பட்டு அரிசி, காய்கறிகளுக்காக நாம் அடித்துக் கொள்வதை கண் முன்னே பார்க்கத்தான் போகிறோம். அந்த நேரத்தில் இந்த நிலக்கரியால் எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய இந்த கருத்தால் என்எல்சி நிர்வாகம் கோபம் அடைந்தாலும், எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
சோழ நாட்டின் பெருமை இழந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி எடுக்கிறேன், மீத்தேன் எடுக்கிறேன் என்று ஒவ்வொன்றாக நீங்கள் செய்து கொண்டிருந்தால், அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது? என்பதுதான் இப்போதைய இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாக, கவலையாக உள்ளது
தற்போது கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ள நிறுவனங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை குடைய தொடங்கி உள்ளன. அந்த மலைகளை குடையும் பட்சத்தில், தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய பருவ மழை பாதிக்கப்படும்.
பூமியில் இருக்கும் அனைவரும் ஏசி காற்றில் வாழ்வதில்லை. புங்கை மர காற்றிலும், வேப்பமர காற்றிலும் இளைப்பாறுபவர்கள் ஏராளமாக இந்த பூமியில் உள்ளனர்.
என்எல்சி நிர்வாகத்திற்காக வாதாடிய இந்த வழக்கறிஞர் இது குறித்து விளக்கம் அளிக்கும் வரை, தான் நீதிமன்ற அறையில் இருக்கக்கூடிய அனைத்து ஏசிக்களையும் இன்று நாள் வரை அனைத்து வைக்க உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
English Summary
Chennai HC Condemn NLC Issue