பெண்கள் குறித்து அவதூறு பேச்சு - பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டம்..!!
chennai hight court order no action against minister ponmudi for womens case
சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே எதிரான சொத்து குவி்ப்பு வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ‘பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, ஏப்ரல் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக காவல் துறைக்கு கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பெண்களையும், தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையி்ல் அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்புடையது அல்ல. இதன்மூலம், சைவ, வைணவ சமயத்தினர் மற்றும் பெண்களின் மனதை புண்படுத்தியுள்ளார்.
அவரது வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது தமிழக போலீஸார் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. வெறுப்பு பேச்சுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வாயிலாக சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இதுபோல பேசியுள்ளார்.
ஆகவே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்கும் வகையில் இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
chennai hight court order no action against minister ponmudi for womens case