எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்! தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
ChennaiHC ordered TNgovt to respond Auto fare based on fuel price
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிபொருளுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படாததால் எரிபொருள் விலைக்கு ஏற்றார் போல் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தானாகவே உயர்த்தி வசூலிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 6ம் தேதி எரிபொருள் விலைக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு ஆட்டோ மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும்" என மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்த நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் கோரினார். இதனை அடுத்து நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கில் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
ChennaiHC ordered TNgovt to respond Auto fare based on fuel price