1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்..நடவடிக்கையை தீவிரபடுத்த பொதுநல அமைப்புகள் கோரிக்கை!
Class 1 student sexually assaulted Public interest groups demand intensifying action
1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று (13.03.2025) மாலையில் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, பி போல்ட் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவி (வயது 7) ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டப் பிரிவு 6-ன்கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற போதுதான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர்.
பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன்மூலம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன.
எனவே, பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோரை மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குப் பிணை கிடைக்காமல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் வைத்தே புலன்விசாரணை முடித்து, குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவிக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கவும், உளவியல் கவுன்சிலிங் வழங்கவும், ரூபாய் 25 இலட்சம் நிவாரணம் வழங்கவும் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர், டிஜிபி, டி.ஐ.ஜி., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. உள்ளிட்டோருக்கும் அளிக்கப்பட்டது.
English Summary
Class 1 student sexually assaulted Public interest groups demand intensifying action