#BREAKING:: திமுக கவுன்சிலர் மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!!
CM MKStalin condoles the death of DMK councillor
சென்னை மாநகராட்சியின் 122 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு இன்று அதிகாலை உடல்நல குறைவு காரணமாக காலமானார். சென்னை மாநகராட்சியின் 9வது மண்டலத்திற்கு உட்பட்ட 122 வது வார்டு தேனாம்பேட்டை கவுன்சிலராக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக ஷிபா வாசு காலமானது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் திமுக கவுன்சிலர் ஷிபா வாசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான திருமதி ஷிபா வாசு அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.
மக்கள் பணியாளராகவும் கழகத்தின் செயல் வீரராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122வது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MKStalin condoles the death of DMK councillor