தருமபுரி: மதுக்கடை கேட்டு மனு அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்! பின்னனியில் இருக்கும் அந்த சிலர்? அதிரவைக்கும் எதிர் மனு!
Dharmapuri villagers liquor shop issue
தர்மபுரி அருகே தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று, சிலரின் தூண்டுதலின் பேரில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் முழுவதும் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில், நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமத்தை சேர்ந்த ஒரு 20 பேர், தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மதுக்கடைகள் வேண்டாம் என்று இன்றைய இளைய தலைமுறையே ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்படி ஒரு அருவருப்பான செயலை எந்த ஒரு கிராம மக்களும் செய்ய வாய்ப்பு இல்லை. யாரோ ஒருவர் பயனடைய, காசு கொடுத்து மக்களை அழைத்து வந்து இப்படியான ஒரு மனுவை கொடுத்திருப்பார்கள் என்று அந்த பகுதியில் இருந்து நமக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், மனு கொடுத்த ஏழு கிராமங்களில் ஒரு கிராமமான கெட்டூர் கிராமத்தின் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு தற்போது மது கடை திறக்க ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
அவர்களின் அந்த மனுவில், "ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, புள்ளப்பட்டி, மாங்கரை, பளிஞ்சிரஅள்ளி, கெட்டூர், அரங்காபுரம் மற்றும் பெத்தம்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் சார்பாக இம்மனுவை தாங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
கடந்த வருடம் 01 நவம்பர் 2023 மாங்கரை பிரிவு சாலையில் அரசு மதுபானக் கடை அமைக்க கூடாது என மனு அளித்ததின் பேரில், மாவட்ட ஆட்சியர் அரசு மதுபானக் கடை அமைக்க மாட்டோம் என உறுதி அளித்திருந்தார்.
தற்போது அரசு மதுபானக்கடையை மீண்டும் மாங்கரை பிரிவு சாலையில் அமைக்க ஒரு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். மதுபானக்கடை அமைய உள்ள இடத்தில் குடியிருப்புகள்,அரசுப் பள்ளி மற்றும் கோயில் அமைந்துள்ளது.
கடந்த 10.08.2024 ஆம் தேதி அரசு மதுபானக்கடையை திறக்க ஒரு சிலர் திறக்க முயற்சி செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வந்தபோது, மீண்டும் 05.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இரண்டாவது முறையாக மனு அளித்தோம்.
மனு வாங்கிய பெண் அதிகாரி அந்த இடத்தில் கடை வேண்டாம் என்றால், வேறு இடத்தை நீங்களே தேர்வு செய்து தருமாறு எங்களிடமே கோரினார்.
நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் அவர் அமைதியாக சென்றுவிட்டார். இந்த அரசு மதுபானக்கடை எங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டால் பொதுமக்களும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் பெண் பிள்ளைகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.
விவசாய நிலங்களில் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை போடும் போது விவசாயம் செய்ய இயலாது. மேலும் மது போதையில் வாகனங்களை வேகமாக ஓட்டினால் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது மோதி உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கௌவே அங்கு பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த மதுபான கடை அமைத்தால் எங்கள் கிராமங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே நாங்கள் 05.08.2024 அன்று மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மது செய்தோம். எங்கள் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசு அதிகாரிகள் எங்கள் ஊரில் அதே இடத்தில் கடை திறக்க மீண்டும் மீண்டும் ஒரு சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆகவே மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்கள் மேற்படி அரசு மதுபான கடையை திறக்க கூடாது என்றும் பொதுமக்கள் நலன் கருதி அதனை உடனே கைவிட வேண்டும் எனவும் இதற்கு நிரந்தர தீர்வு வழங்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Dharmapuri villagers liquor shop issue