திமுக எம்எல்ஏ ஆடியோ விவகாரம்.. டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுங்க.. திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.!!
DMK cadres strike posters against Pattukottai DSP
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
சட்ட விதிகளை மீறி குளத்தில் மண் எடுத்ததாக மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றை பட்டுக்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான அண்ணாதுரை டிஎஸ்பி பாலாஜியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் உள்ளிட்டவற்றை மீண்டும் உரிமையாளர்களிடமே வேண்டும் என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ள நிலையில் காவல்துறையின் மூலம் ஆடியோ வெளியிடப்பட்டதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் பட்டுக்கோட்டை பகுதி திமுகவினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜி மற்றும் எஸ்.ஐ புகழேந்தி ஆகியோரை கண்டித்து பட்டுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த போஸ்டரில் "பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜி அவர்கள் தனிப்பட்ட உரையாடலை விதியை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்து உள்ளார். அதற்கு உதவியாக இருந்த உதவி ஆய்வாளர் புகழேந்தி அவர்கள் இருவர் மீதும் தமிழ்நாடு காவல்துறை நடத்தை வீதி 15 இன் கீழ் துறை ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க கோருகிறோம்" என பட்டுக்கோட்டை மக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுகவினரே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
DMK cadres strike posters against Pattukottai DSP