விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை திட்டம்? டெல்டா மாவட்ட மக்கள் கோரிக்கை..!
Double track project between Villupuram and Thanjavur
விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக தஞ்சாவூர் வரை, இரட்டை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, டெல்டா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மார்க்கமாக மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் என, தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சிக்னல், கிராசிங் பிரச்னை ஏதுமின்றி எதிரெதிர் திசைகளில் ரயில்கள் எளிதில் செல்கின்றன.
![](https://img.seithipunal.com/media/thanja-2rmeh.jpg)
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கடலுார், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை கடந்து, மற்றொரு மார்க்கத்தில் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் செல்கின்றன.
அதில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி பொன்மலை இடையே, 49 கி.மீ.,க்கு, 2019-ஆம் ஆண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் இடையே, 40 கி.மீ.,க்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவில்லை.
![](https://img.seithipunal.com/media/taja-xt2rq.jpg)
இதனால், ஒருவழி பாதையில் எதிரெதிர் திசைகளில் ரயில்கள் வரும் போது, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, பின் புறப்பட்டு செல்வதால் நேர விரயம் ஏற்படுகிறது. மேலும் ஒருவழி பாதையில் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து அதிகமாக உள்ள டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் இரட்டை ரயில் பாதை அமைப்பதால் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Double track project between Villupuram and Thanjavur