என்.எல்.சி பற்றி பேச விவசாயிகளுக்கு தடை விதிப்பதா? கடும் கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்த அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Condemn Cuddalore collector for NLC
உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? கடலூர் ஆட்சியரின் அடக்குமுறை முறியடிக்கப்படும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்ற போது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்?
என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்?
என்.எல்.சி நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது.
இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Condemn Cuddalore collector for NLC