என் உயிரினும் மேலான தமிழினச் சொந்தங்களே! மருத்துவர் இராமதாஸ் மடல்! - Seithipunal
Seithipunal


என் உயிரினும் மேலான தமிழினச் சொந்தங்களே! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மடல்!


என் உயிரினும் மேலான தமிழினச் சொந்தங்களே!

‘‘தமிழைத் தேடி...’’ பயணத்திற்கு திசையெட்டிலுமிருந்து கிடைத்து வரும் ஆதரவும், வரவேற்பும் என்னை வியக்க வைத்திருக்கின்றன. அன்னை தமிழை அழிக்க ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள் நடக்கலாம்; ஆனால், அவற்றைக் கடந்து தமிழ்த்தாய் வலிமையானவள். தமக்கு ஏற்பட்ட ஆபத்தை விரட்டவும், தம்மைக் காக்கவும் நடத்தப்படும் பயணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமது குழந்தைகளின் ஆதரவை ஒருமுகப்படுத்தித் தரும் வலிமை தமிழ்த்தாய்க்கு உண்டு என்பதைத் தான் ‘தமிழைத் தேடி’ பயணத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைக்கத் தொடங்கியுள்ள ஆதரவுகள் உறுதி செய்கின்றன.

‘‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!’’
என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் சங்கநாதம். தமிழைக் காக்க வேண்டும் என்றால் தமிழர்கள் அனைத்தையும் மறந்து ஒன்றுபடுவார்கள் என்பது தான் பாரதிதாசனார் சொல்லும் செய்தியாகும். அது புடம்போடப்பட்ட உண்மை என்பதை, தமிழ்நாட்டில்   ‘தமிழைத் தேடி’ பயணத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளிகளில் தொடங்கி  கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ஆம் நாள் உலக தாய்மொழி நாளில்  சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத் தேடி பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கடந்த மாதம் 20&ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.

அப்போது தொடங்கி இப்போது வரை உலகின் பல மூலைகளில் இருந்தும் தொலைபேசி மூலம் எனக்கு ஆதரவும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆதரவும், வாழ்த்துகளும் எனக்கானதாக நான் கருதவில்லை. அன்னை தமிழுக்கு ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தகர்த்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான் களமிறங்கியிருப்பதால் தான் இவ்வளவு ஆதரவு குவிகிறது என்பதை நான் அறிவேன். அன்னை தமிழின் நிலை குறித்த கவலை உலகம் முழுவதும் இருக்கிறது;  தமிழைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது என்பதே இந்த ஆதரவு சொல்லும் செய்தி.

‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. பாரதிதாசன் குறிப்பிட்டதைப் போன்று வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை. ஒரு மொழி தாய் வழியாகத் தான் பிள்ளைகளுக்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தாய்க்கும் சேய்க்குமான உரையாடலே தமிழில் நடக்காத போது, தமிழ் எவ்வாறு தலைமுறைகளைக் கடக்கும்?

உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களின் முதன்மை அடையாளம் தமிழ் மொழி தான். அந்த அடையாளத்தை நாம் இழந்து விட்டால், நம்மிடம் உள்ள அனைத்தையும் இழந்து விடுவோம். இந்த அடிப்படை உண்மையை உணராமல் நம்மால் அன்னை தமிழை காக்க முடியாது.

தமிழ் மொழி தான் நமது அடையாளம்; அதை எதற்காகவும் இழக்கக்கூடாது என்ற உணர்வு நமக்குள் உருவாகி விட்டால், தமிழ்மொழி தழைத்தோங்கிவிடும். அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை; பள்ளிகளில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; திரைப்படங்களில் தமிழ் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்மை தான்.

இவற்றை மாற்றுவதற்கு பெரும் போராட்டங்கள் தேவையில்லை. ஒற்றை உறுதியேற்பு போதுமானது. அன்னை தமிழை யாரெல்லாம் மதிக்கவில்லையோ, அவர்களையெல்லாம் நாம் மதிக்கத் தேவையில்லை என்று உறுதிமொழியேற்றுக் கொண்டால் போதுமானது.

நமது துணையும், ஆதரவும் எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் தமிழ் செழிக்கத் தொடங்கிவிடும். அதனால் அன்னை தமிழை மீட்பதற்கான முயற்சி நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். அதன்பிறகு நாம் கொடுக்கும் அழுத்தத்தால் அனைத்து இடங்களிலும் அன்னை தமிழ் அரியணை ஏறும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.

‘தமிழ் கூறும் நல்லுலகு’ என்பது தான் நாம் வாழும் மண்ணுக்கான பெருமை; அது தான் நமது அடையாளம். அந்த பெருமை இப்போது நமது மண்ணுக்கு இருக்கிறதா? என்ற ஐயம் என்னை வாட்டுகிறது. அந்த பெருமையை மீண்டும் அடைய வேண்டும் என்ற வேட்கை என்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழைத் தேடி...’ என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் சென்னையில் தொடங்கி பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பயணம் வரும் 28-ஆம் நாள் மாலை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நிறைவடைகிறது. அன்னை தமிழைக் காப்பதற்காக நடத்தப்படும் இந்த பயணத்தில் அரசியலுக்கு இடமில்லை.

பிரிக்கும் அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, மொழிக்காக நாம் இணைவோம். அரசியல், மதம், சாதி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழ் மொழியைக் காப்பதற்காக நடத்தப்படும் தமிழைத் தேடி பரப்புரை பயணத்தில் அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்னை தமிழைக் காக்க அனைவரும் கைகோர்ப்போம்!

இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Letter fo Tamil People Thamizhai Thedi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->