தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் - டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Ramadoss Say About Cauvery Water issue 09082023
கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அங்குள்ள காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு கடந்த சில நாட்களில் 10 டி.எம்.சி அளவுக்கு அதிகரித்திருக்கும் போதிலும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு மற்றும் அதில் உச்சநீதிமன்றம் செய்த திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.
அதன்படி ஜூன் மாதத்தில் தொடங்கி இன்று வரை கர்நாடகம் 19.06 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். மாறாக 3 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. அதுவும் கூட கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப் பட்டது அல்ல, அவற்றுக்கும் கீழே உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மூலமே கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு நடப்புப் பருவத்தில் இன்று வரை கர்நாடகம் 16 டி.எம்.சிக்கும் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது உண்மை. ஆனால், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது.
கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளில் கடந்த 5&ஆம் தேதி நிலவரப்படி 32.24 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 6421 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால், இன்றைய நிலவரப்படி நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 42,000 கன அடி அளவுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் நீர்வரத்து 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. அணைகளின் நீர் இருப்பும் இன்றைய நிலவரப்படி 43 டி.எம்.சியாக அதிகரித்திருக்கிறது. அதாவது கர்நாடக அணைகளின் நீர் இருப்பு கடந்த 4 நாட்களில் மட்டும் 10 டி.எம்.சிக்கும் மேலாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கர்நாடகத்தில் சாகுபடி தொடங்குவதற்கு இன்னும் சில காலம் ஆகும். அதனால், இருக்கும் நீரில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும். அதுமட்டுமின்றி, இனிவரும் நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் என்பதால் கர்நாடகத்திற்கு எந்தவகையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. இது தான் கர்நாடகத்தின் இயல்பான மனநிலை; இந்த மனநிலை எக்காலமும் மாறாது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால், வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அதனால், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும். ஆகவே, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு ஒத்துழைக்க வேண்டும் என்று இனிப்பு தடவிய வார்த்தைகளால் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் ஒரு பக்கம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் கர்நாடக அணைகளில் தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கிறார்.
இப்போதாவது இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து மழை பெய்தால், கர்நாடக அணைகள் நிரம்பி, வேறுவழியின்றி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இருக்காது. அதனால் தான் மேகதாது அணையை தமிழகம் எதிர்க்கிறது.
கர்நாடகத்தில் சாகுபடி நடைபெறாத சூழலில் அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை கர்நாடக அரசு உணர வேண்டும். கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், அவற்றிலிருந்து நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை காவிரியில் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Cauvery Water issue 09082023