தமிழகத்தின் மருத்துவத்துறை செயல்பாடுகள் பாதிப்பு | தமிழக அரசுக்கு எடுத்துரைக்கும் டாக்டர் இராமதாஸ்.!
Dr Ramadoss Say About Medical Directors post
இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மருத்துவத்துறை செயல்பாடுகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக் கொள்கின்றனர்!
மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை.
அவற்றை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை. இதனால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன!
எடுத்துக்காட்டாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்), மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் முதன்மையர் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்?
இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை.
மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Medical Directors post