சென்னையில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழையால் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரம்..!
Due to the onset of Northeast Monsoon in Chennai, precautionary measures are intensified..!
மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன், சென்னையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், வார்டு பொறியாளர்கள் 2021ம் ஆண்டை விட, வரும் பருவ மழையில், 80 சதவீதம் வெள்ள பாதிப்பு குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும்,மாநகராட்சி, வடகிழக்கு பருவ மழைக்கான முன் தடுப்பு நடவடிக்கையை துவக்கி இருப்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகளவு மழை பெய்தது. அதில் சென்னையில் பெய்த கன மழையால் 2,000க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. தி.மு.க. அரசு, மழை நீர் தேக்கத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தாதது தான் காரணம் என குற்றஞ்சாட்டியது. அதேநேரம், தி.மு.க., அரசு மழைநீர் வடிகால் துார் வாரி சரியாக பராமரிக்கவில்லை என, அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியது.
தற்போது, தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், இந்தாண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், மக்கள் முழுமையாக கோபத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்படும். இதனால், 2021ல் மழை நீர் தேங்கிய பகுதிகள் மற்றும் வடிகால் இல்லாத பகுதிகளில் கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில், 1,033.15 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இணைப்பு இல்லாத 144 இடங்களையும் கண்டறிந்து, மழை நீர் வடிகாலுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தனி கவனம் செலுத்தி முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, தலைமை செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்,அந்த பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை துவக்கி உள்ளது. அதன்படி, ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில், வார்டு வாரியாக உள்ள இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களிடம், தனித்தனியாக ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த ஆலோசனையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைப்பதற்கான இடங்கள் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இது பற்றி மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது: கடந்தாண்டுகளில் 64வது வார்டில் 28 இடங்களில் மழை நீர் தேக்கம் இருந்தது. தற்போது வரும் ஆண்டில் ஏழு இடங்கள் என்ற நிலையில் தான் மழைநீர் தேக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நீர் தேக்கம், மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட விபரங்கள் சென்னை மாநகராட்சியின், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.என்று அவர் தெரிவித்தார்.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாக ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது, மாநகராட்சி அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 55 சதவீதம் வரை முடிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் 90 சதவீதம் வரை பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பணிகள் முழுமை பெறாவிட்டாலும், அங்கு மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்திபட்டுள்ளது.
English Summary
Due to the onset of Northeast Monsoon in Chennai, precautionary measures are intensified..!