டி.டி.வி தினகாரனுக்கு எதிரான வழக்கு - இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!
eps case return against ttv dinakaran
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். மேலும் அதிமுகவின் கொடியைப் போன்று கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியும், அதன் நடுவே ஜெயலலிதா புகைப்படத்தையும் பயன்படுத்தி இருந்தார்.
இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு எதிராக 2019-ம் ஆண்டு சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது, ஜெயலலிதா பெயர், அவரது புகைப்படம், அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு சென்னை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில், இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eps case return against ttv dinakaran